அதிநவீன வசதிகளுடன் பேட்டரி பேருந்து: கேரளாவில் அறிமுகம்
கேரளாவில், செல்போன் சார்ஜர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் ரூ.2 கோடி செலவில் அதிநவீன பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேரளவில் பினராயி விஜயன் முதல்வராக பதவி ஏற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், போக்குவரத்து கழகத்தையும் நவீனமயமாக்கி வருகிறார்.
அதன்படி, பொது மக்களின் வசதிக்கேற்ப பேட்டரியில் இயங்கும் நவீன பேருந்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது. ரூ.2 கோடியே 5 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பேருந்து முழுமையாக பேட்டரியில் இயங்கக்கூடியது. 5 மணி நேரம் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்துவிட்டால் போதும், 350 கி.மீ துரத்திற்கு பேருந்தை இயக்கலாம்.
குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட இந்த பேருந்தில் 35 சொகுசு இருக்கைகள், குடிநீர், கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதுபோல், செல்போன் சார்ஜ் செய்ய ஒவ்வொரு இருக்கை அருகேயும் அதற்கான மின்சாதன வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வேக கட்டுப்பாட்டு கருவி, தானியங்கி முறையில் கதவுகள் மூடி திறக்கும் வசதிகள் என பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் பேருந்தில் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்களுக்கான வசதியும், சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த அதிநவீன பேருந்து தற்போது சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இது பொது மக்களிடையே வரவேற்பை பெரும்பட்சத்தில் மாநிலம் முழுவதும் 300 நவீன பேருந்துகளை இயக்க கேரள அரசு திட்டமிடப்பட்டுள்ளது.