ஸ்டாலின் கண் அசைத்தால் போதும் - துரைமுருகன்
அதிமுக அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை, அவரின் கண் அசைவே போதும் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடந்த காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக அரசை அசைக்க முடியாது என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “காவிரி பிரச்சினையில் சாதித்தது திமுகவா? அதிமுகவா என்பது குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயார். உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும், இன்று வரை காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்காமல் நாகபட்டினத்தில் நின்று கொண்டு “நான் தான் காவிரிப்பிரச்சினையில் சாதித்து விட்டேன்” என்று நர்த்தனம் ஆடுவதற்கு முதலமைச்சருக்கு கொஞ்சமாகவது தயக்கம் வேண்டாமா?"
“ ‘இறுதியில் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக அரசை அசைக்க முடியாது’ முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி கூறியிருக்கிறார். ஒரு ஸ்டாலினை சட்டமன்றத்தில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கிறது அரசு.
அதிமுக அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை, அவரது கண் அசைவே போதும்" அறிக்கையில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.