அமெரிக்காவில் ஹெச்-4 விசாதாரருக்கு பணியுரிமை ரத்து!
ஹெச்-1பி விசா, அமெரிக்க நிறுவனங்கள், சிறப்பு பணிகளுக்கென வெளிநாட்டு பணியாளர்களை அமர்த்திக்கொள்ள அனுமதியளிப்பதாகும். இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்களிடையே பிரபலமானது இந்த ஹெச்-1பி விசா.
ஹெச்-1பி விசாதாரரின் கணவர் அல்லது மனைவியாகிய வாழ்க்கைத் துணைக்கு ஹெச்-4 விசா வழங்கப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய அதிபர் ஒபாமாவின் அரசு, பணியின் அடிப்படையில் சட்டப்பூர்வமாக நிரந்தர குடியுரிமையை எதிர்நோக்கியிருக்கும் ஹெச்-1பி விசாதாரர்களின், ஹெச்-4 விசா பெற்றுள்ள வாழ்க்கைத் துணையினருக்கு அமெரிக்காவில் பணிபுரியும் உரிமையை வழங்கியது.
அமெரிக்க பணியாளர்களுக்குப் பதிலாக வெளிநாட்டவரை பணியில் அமர்த்துவதற்கு அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்-1பி விசாவினை தவறாக பயன்படுத்தி வருகின்றன என்ற எண்ணத்தில் தற்போதைய அதிபர் டிரம்ப்பின் அரசு, இந்த விசாவுக்கான கொள்கை முடிவினை மறுபரிசீலனை செய்து வருகிறது. கூடுதலாக, ஹெச்-4 விசா வைத்திருப்பவர்களின் அமெரிக்க பணியுரிமையை ரத்து செய்யும் முடிவிலும் அரசு இருந்து வந்தது.
கடந்த வாரம் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிவிக்கையின்படி, ஹெச்-4 விசா வைத்துள்ள வெளிநாட்டவருக்கு பணிபுரியும் உரிமையை ரத்து செய்யும் அரசின் முடிவு உறுதியாகியுள்ளளது. இந்த ரத்து நடவடிக்கை, அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்திய பெண்களை பாதிக்கும்.
அமெரிக்காவின் குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறை, ஹெச்-4 விசா குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால், பணியுரிமை ரத்து குறித்ததான சட்ட முன்வரைவு பொதுமக்களின் கருத்துக்காக இம்மாதம் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.
“அதிபரின் அமெரிக்க பொருட்களை வாங்குவோம்; அமெரிக்கர்களை பணியிலமர்த்துவோம் என்ற நிர்வாக ஆணைக்கேற்ப எடுக்கப்படும் நடவடிக்கைகளில் பணி வழங்கும் விசா பற்றிய மறுபரிசீலனையும் உள்ளது" என்று குடியேறுதல் மற்றும் குடிபுகல் துறையின் செய்தி தொடர்பாளர் மைக்கேல் பார்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிரீன்கார்டுக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இந்திய அமெரிக்கர்கள், நியூயார்க்கை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பால் டோங்கோவை சந்தித்து, கிரீன்கார்டு வழங்கும் பணியில் உள்ள தொய்வை சரிசெய்யும்படியும், ஹெச்-4 விசாதாரர்களின் பணியுரிமையை ரத்து செய்யக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.