சடங்கு என்ற பெயரில் பெண்ணுக்கு கொடுமை - உயர் நீதிமன்றம் கண்டனம்!

சடங்கு என்ற பெயரில் பெண்களை துன்புறுத்துவதை சகித்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி, நள்ளிரவில் தொப்பூர் அணைக்கு அழைத்துச் சென்று, ஆடைகளை களைந்து, மொட்டை அடித்து, நாக்கில் சூடு வைத்து, தாலியை கழற்றி விட்டு மீண்டும் கணவனைக் கொண்டு கட்டச் செய்து அவரது நாத்தனார்கள் துன்புறுத்தியுள்ளனர்.

2001-ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தந்தையும் அளித்த புகாரின் அடிப்படையில் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தர்மபுரி நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "சடங்கு என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது.

இந்த செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும்” எனக் கண்டனம் தெரிவித்தார்.

அதேசமயம், சம்பவம் நடந்து 17 ஆண்டுகளாவதாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெண்களாக இருப்பதாலும், ஏற்கனவே அவர்கள் அனுபவித்த தண்டனையே போதுமானது எனக் கூறிய நீதிபதி, நால்வருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அந்த தொகையை 8 வாரங்களில் தர்மபுரி நீதிமன்றத்தில் செலுத்தவும், அதை பாதிக்கப்பட்ட பெண் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.

More News >>