காவிரி மேலாண்மை ஆணையம்... கர்நாடகா அதிரடி!
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் நியமிக்கப்படுவார்கள் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினர்கள் பட்டியலை தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் வழங்கியுள்ளன. ஆனால் கர்நாடகா மாநில அரசு சில காரணங்களை சுட்டிக்காட்டி உறுப்பினர் பட்டியலை வழங்க காலம் தாமதம் செய்து வந்தது.
இந்நிலையில் இன்று பெங்களூருவில் பேசிய அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, "காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் சில பிரச்சனைகள் உள்ளது. அந்த பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்" என்றார்.
“அது மட்டுமல்லாமல் இந்திய அரசியல் சாசனத்தின் படி இந்த விஷயங்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் உத்தரவை முழுமையாக ஏற்று அதன்படி கர்நாடகா அரசு செயல்படும். சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்" என்று குமாரசாமி தெரிவித்தார்.
“தற்போதைய சூழ்நிலையில் நல்ல மழை வருவதால் ஆணையத்திற்கு வேலையே இல்லை. இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணை யத்திற்கான உறுப்பினர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்” என்று அவர் கூறினார்.