ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து விலகியது அமெரிக்கா!
அரசியல் பாகுபாடின் காரணமாக அமெரிக்க ஐநா மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் விலகல் முடிவை ஐநா-வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “இத்தனைக் காலம் ஐநா-வின் மனித உரிமைகள் ஆணையம் என்பது அரசியல், தேசிய பாகுபாடுகளை எல்லாம் கடந்த மனித உரிமையை நிலைநாட்டும் பணியைச் செய்து வந்தது.
ஆனால், தற்போது தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பதும் மீறுவோர் தொடர்ந்து ஆணையத்தில் உயர் பதவிகளில் அமர்த்தப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது. தொடர்ந்து மனித உரிமைகளை எல்லாம் மீறிய கூட்டங்கள் தப்பித்துக் கொண்டே வருகின்றன.
இவை அனைத்தையும் ஆணையமும் அரசியல் போர்வையால் மூடி மறைத்து வருகிறது. மீறல்களுக்குத் துணை புரியும் நாடுகளுக்கு நற்சான்றிதழ் அளித்து பாகுபாடு உடன் ஐநா மனித உரிமை ஆணையம் நடந்து கொள்கிறது.
மனித உரிமைகளை எள்ளி நகையாடச் செய்த கூட்டணியில் நாங்கள் தொடர விரும்பவில்லை. அதனால் அமெரிக்கா இந்த ஆணையத்திலிருந்து வெளியேறுகிறது” எனக் கூறியுள்ளார்.