டி.டி.வி தினகரனின் ஆர்.கே நகர் தொகுதி வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பின் இடைத்தேர்தலை சந்தித்த ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அ.தி.மு.க இருவேறு அணிகளாக பிரிந்த நிலை கண்டு குழப்பமடைந்து இருந்தனர். முதலில் பணப்பட்டுவாடாவை தொடர்ந்து ஒரு முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு ஒரு வழியாக இடை தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், தி.மு.க.சார்பில் மருதுகணேஷ், என முக்கிய கட்சிகள் போட்டியிட்டன. சுயேட்சையாக டி .டி .வி.தினகரன் போட்டியிட்டார்.
இடைத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்றாலும் தினகரன் மீது பணம் கொடுத்து வெற்றி பெற்றார் என பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். ஆர்.கே.நகர் மக்கள் ஒரு படிமேலே சென்று, தொகுதி மக்களுக்கு தினகரன் நன்றி செலுத்த சென்ற போது 20 ரூபாய் நோட்டுகளை காட்டி பணம் எங்கே என கூச்சல் போட்டனர்.
அதுமட்டுமில்லாமல், சுயேச்சை வேட்பாளர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கின் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தினகரன் வெற்றிபெற்றது செல்லும் என்று தீர்ப்பளித்து சுயேச்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.