பல கோடி மதிப்பிலான சிலைகள் திருட்டு... முக்கிய குற்றவாளி கைது!
சிலை கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலின் சிவன், பார்வதி உலோக சிலைகள் கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டன.
இதுபோல வந்தவாசி அருகே சவுந்தரியபுரத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் மற்றும் பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் ஆகியவற்றில் இருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரின் 6 சிலைகளும் கடத்தப்பட்டன.
80 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த 8 சிலைகளையும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினர் உடனடியாக மீட்டனர். இந்த கடத்தலில் தொடர்புடையவர் என்று கருதப்படும் காவாங்கரை ஜெயக்குமாரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரை, சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான டிஎஸ்பி அழகு சுந்தரம் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் கைது செய்தனர்.