காயம் காரணமாக வெளியேறிய நெய்மர்: தொடர்ந்து விளையாடுவாரா?
ஃபிபா கால்பந்து உலக கோப்பை லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்த ஆண்டு உலக கோப்பையில், லீக் போட்டிகளிலேயே பல அதிர்ச்சிகள் இருந்தன. இதனால், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிக் கொண்டிருகின்றன. தனது முதல் போட்டியை பிரேசில், ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக விளையாடியது.
இந்தப் போட்டியில் பிரேசில் சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்று பலர் ஆருடம் கூறிய நிலையில், ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதனால், அடுத்தப் போட்டியில் பிரேசில் கண்டிப்பாக வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.
இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் நெய்மர், பயிற்சியின் போது ஏற்பட்ட சின்ன காயத்தால் வெளியேறியுள்ளார். இதனால், அவர் தொடர்ந்து உலக கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பிரேசில் கால்பந்து அணியின் செய்தித் தொடர்பாளர் வின்சியஸ் ரோட்ரிகஸ், ‘வலது குதி காலில் ஏற்பட்ட வலி காரணமாக நெய்மர் நேற்று நடந்த பயிற்சியின் போது பாதியிலேயே வெளியேறிவிட்டார். அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்ற அணியினர் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருவர்’ என்று கூறியுள்ளார்.