கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை
ஜெய்ப்பூர்: சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி என்பவரை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூர் ஸ்ரீநகர் அனெக்ஸ் 2வது தெருவைச் சேர்ந்தவர் முகேஷ்குமார் (37). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக சென்னையை அடுத்த புழலில் உள்ள புதிய லட்சுமிபுரம் கடப்பா சாலை முத்துமாரியம்மன் கோவில் தெருவில் மகாலட்சுமி தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் 16ம் தேதி நகைக்கடையின் கூரை வழியாக துளையிட்டு அதன் உள்ளே இறங்கிய கொள்ளையர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர். கொள்ளையர்கள் தங்க நகை உள்ளிட்டவை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இந்த சாட்சியைக் கொண்டு போலீசார் கொள்ளையர்களை அடையாளம் கண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடைக்கு மேல் தளத்தில் உள்ள கடையை சமீபத்தில் ராஜேஷ் என்பவர் வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது. இதன் பின்னர், ராஜேஷையும் அவனது கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நான்கு பேர் கைதாகிய நிலையில், மேலும் சில கொள்ளையர்கள் ராஜஸ்தானுக்கு தப்பியுள்ளதாக போலீசாருக்கு தெரிந்தது.
இதனால், ராஜஸ்தானுக்கு விரைந்த தனிப்படையினர் பாலி மாவட்டத்தில் இன்று காலை கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது, கொள்ளையன் ஒருவன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டான். இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் தமிழக காவல் துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ராஜஸ்தான் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தானில் சுட்டுக் கொள்ளப்பட்ட ஆய்வாளர் பெரிய பாண்டியின் குடும்பத்திற்கு காவல் ஆணையர், துணை ஆணையர் சுதாகர், உதவி ஆணையர்கள் ஜான் சுந்தர், ஆல்பர்ட்வில்சன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.