ஆடி கார் சிஇஓ ரூபர்ட் ஸ்டட்லர் கைது!
ஆடி சொகுசு கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரூபர்ட் ஸ்டட்லர், ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரின் டீசல் புகை சோதனையில் மோசடி செய்த குற்றத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதன்முதலாக இந்த மோசடி பற்றிய தகவல் பொதுவெளியில் பரவியது.
வாகனங்கள் வெளியிடும் புகையில் உள்ள மாசின் அளவினை மோசடியாகக் குறைத்துக் காட்டுவதற்கான பாகத்தினை பொருத்தியதாக ஆடி நிறுவனத்தின் பழைய மற்றும் இப்போதைய பணியாளர்கள் 20 பேர் மேல் குற்ற விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு விற்கப்பட்ட 2,40,000 கார்களில் மோசடி தொழில்நுட்பம் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சந்தேகத்தின்பேரில் ரூபர்ட் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கான ஆதாரங்களை அழித்துவிடாமல் தடுப்பதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
55 வயதான ரூபர்ட் ஸ்டட்லர், ஆடியின் தாய் நிறுவனமான வோல்ஸ்வேகனில் 1990-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். வோல்ஸ்வேகனின் நிர்வாக குழுவில் 2010-ம் ஆண்டு முதல் இடம் பெற்றுள்ளார்.
ஸ்டட்லர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள வோல்ஸ்வேகன் நிறுவனம், விசாரணை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நடவடிக்கையை தொடர்ந்து ஃப்ரான்பர்ட் சந்தையில் வோல்ஸ்வேகனின் பங்குகள் 3 சதவீத சரிவினை சந்தித்தன.