149 தரமான தமிழ் படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம்: விஷால் நன்றி

தரமான மற்றும் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படங்களை தேர்வு செய்து ஆண்டு தோறும் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த 200 ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை குறைந்த செலவில் வெளியான சுமார் 149 தரமான தமிழ் திரைப்படங்களுக்கு ரூ. 7 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆர்.ரகுபதி, டி.வி.மாசிலாமணி தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை வெளியான தமிழ் திரைப்படங்களை ஆய்வு செய்து அரசு திட்டத்தின் கீழ் தகுதி பெரும் தரமான தமிழ் திரைப்படங்களை தேர்வு செய்து தலா 7 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

அதன்படி 2007ல் - 14 திரைப்படங்கள், 2008ல் - 18 திரைப்படங்கள், 2009ல் - 22 திரைப்படங்கள், 2010ல் - 21 திரைப்படங்கள், 2011ல் - 17 திரைப்படங்கள், 2012ல் - 22 திரைப்படங்கள், 2013ல் - 12 திரைப்படங்கள், 2014ல் - 23 திரைப்படங்கள் என மொத்தம் 149 திரைப்படங்களை இருவர் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

தேர்வு செய்யப்பட்ட 149 திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம், மொத்தம் 10 கோடியே 43 லட்சம் காசோலையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஷங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறு பட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த முதலீட்டில் வெளியான தரமான திரைப்படங்களை தேர்வு செய்து தலா ரூ.7 லட்சம் மானியம் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கும், நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என விஷால் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News >>