ஆசிரியர்களை கட்டிப்பிடித்து அழுத மாணவர்கள்!
திருவள்ளூரில், இரு ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றதை ஏற்காத மாணவர்கள் அவர்களை அனுப்ப மறுத்து கட்டிப்பிடித்து கெஞ்சிய காட்சி அனைவரையும் கண்ணீர் விட வைத்தது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 260 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இங்கு 5 ஆண்டுகளாக பணிபுரிந்த பகவான் மற்றும் சுகுணா ஆகிய இரு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். இவரும் பணியிட மாறுதல் ஆணையை பெற பள்ளிக்கு வந்தனர்.
இதனை அறிந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, ஆசிரியர்கள் முன் அமர்ந்து, கெஞ்சி அழுதனர். ஆசிரியர்களை கட்டிப்பிடித்து ‘பள்ளியை விட்டு போகாதீர்கள்’ என தாரை தாரையாக கண்ணீர் வார்த்தனர்.
மாணவர்களை தேற்றிய ஆசிரியர்கள் பகவான் மற்றும் சுகுணா, ஒரு கட்டத்தில் அவர்களின் அன்பை எண்ணி கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டுக் அங்கிருந்து ஆசிரியர்கள் கிளம்பினர்.
ஆசிரியர்கள் மீதான மாணவர்களின் பாசத்தை பார்த்த சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நெகிழ்ந்தனர். ஆசிரியர்கள் பகவான், சுகுணா ஆகியோரின் செயல்பாடுகள் 'சாட்டை' பட கதாநாயகன் சமுத்திரகனியின் நிஜங்கள்.