செல்பியால் தொடரும் விபரீதம்: 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பெண் பலி
பொழுதுபோக்கிற்காக தனது குடும்பத்துடன் மத்தரான் மலைப் பகுதிக்கு வந்திருந்த பெண் ஒருவர், மலை உச்சியில் செல்பி எடுக்க முயன்றபோது 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லியை சேர்ந்த பெண் சரிதா ராம்மகேஷ் சவுகான் (33). இவர் விடுமுறை நாளை கொண்டாட தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் மும்பை வந்திருந்தார். இதன் பிறகு, நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மும்பை அருகே ராய்காத் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல மாத்தரான் என்ற மலைப் பகுதிக்கு சரிதா தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.
மாத்தரான் என்ற மலைப்பகுதியில் உள்ள லூயிஸா பாயின்ட் என்ற மலை உச்சிக்கு சென்ற இவர்கள், இயற்கையின் அழகில் மயங்கி அத்துடன் செல்பி மற்றும் போட்டக்கள் எடுத்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதத்தில், சரிதா செல்பி எடுக்க முயன்றபோது 500 அடி பள்ளத்தாக்கில் கால் தவறி விழுந்தார்.
இதைக்கண்டு, அதிர்ச்சியடைந்த சரிதாவின் குடும்பத்தினர் பதரிப்போயினர். உடனே சம்பவம் குறித்து, மாத்தரான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினருடன் போலீசார் விரைந்தனர்.
இரவு நேரம் என்பதால், சரிதாவை தேடுவதில் மீட்புக் குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், நேற்று நள்ளிரவு நேரத்தில் 500 அடி ஆழத்தில் இருந்த சரிதா சடலமாக மீட்கப்பட்டார். சரிதாவின் உடலைக் கண்டு கணவர் மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.பின்னர், சரிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
செல்பி வாங்கு உயிர் பலி.. வாஷிங்டன் போஸ்ட் ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் உலகளவில் செல்பியால் ஏற்பட்ட உயிர்பலி எண்ணிக்கையில் பாதி அளவு இந்தியாவில் ஏற்படுட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.