ஆளுநர் ஆனந்தி பென்னுக்கு பிரதமரின் மனைவி பதிலடி
பிரதமர் நரேந்திர மோடி தம்மை திருமணம் செய்து கொண்டது உண்மை என ஜசோதாபென், மத்தியப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு பதிலளித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், அங்கன்பாடி ஊழியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.
அப்போது, பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகளின் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்து வைத்துள்ளார் எனக் கூறினார்.
ஆளுநர் ஆனந்தி பென்னின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் மறுத்துள்ளார். “தமக்கும், பிரதமர் மோடிக்கும் திருமணமானது உண்மை.
2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் மனைவியாக தமது பெயரை குறிப்பிட்டுள்ளார். மரியாதைக்குரிய பிரதமர் தமக்கு ராமர் போன்றவர்” என்று ஜசோதா பென் கூறியுள்ளார்.