மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் கைது!
புனேவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டி.எஸ்.கே குழுமத்திற்கு சுமார் 3,000 கோடி ரூபாய் போலி கடன் கொடுத்த வழக்கில், மகாராஷ்டிரா வங்கியின் தலைவர் ரிவீந்திர பி.மராத்தே கைது செய்யப்பட்டுள்ளளார்.
டி.எஸ்.கே குழுமத்தின் டி.எஸ்.குல்கர்னி மற்றும் அவரின் மனைவி ஹேமந்தி கடந்த பிப்ரவரி மாதம் 4,000 முதலீட்டாளர்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். அப்போது, வங்கியிலிருந்து பெறப்பட்ட 2,900 கோடி ரூபாய் கடனை பல விஷயங்களுக்கு மடைமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதையடுத்து, மகாராஷ்டிரா அரசு, கடந்த மாதம் டி.எஸ்.கே குழுமத்துக்குச் சொந்தமான 120 சொத்துக்களையும், 275 வங்கிகளில் இருந்து கண்க்குகளையும் முடக்கியது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பொருளாதார குற்றங்களை மேற்பார்வையிடும் அமைப்பு விசாரித்து வந்தது.
இந்நிலையில் தான் மராத்தே கைது செய்யப்பட்டு உள்ளார். இவருடன், வங்கியின் இயக்குநர் ராஜேந்திரா கே.குப்தா, மண்டல மேலாளர் நித்யானந்த் தேஷ்பாண்டே, மகாராஷ்டிரா வங்கியின் சார்டர்ட் அக்கௌன்டன்ட் சுனில் காத்பாண்டே மற்றும் வி.பி.பொறியியல் குழமத்தின் ராஜீவ் நெவாஸ்கர் ஆகியோரும் இந்த பண மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர்.