ரேஷன் கார்டு ஊர்ல இருக்கா.. கவலை வேண்டாம்...! இனி பக்கத்துலயே மாத்திக்கலாம்
ரேஷன் கார்டை மாற்றாமலேயே கடையை மாற்றும் வகையில், புதிய திட்டத்தை தொழில் நிமித்தமாக இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் குடும்பத்தின் நலன் கருதி செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் மாதம் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்கிறது. தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள 1 கோடியே 98 லட்சத்து 84 ஆயிரத்து 814 ரேஷன்கார்டுகளில் மொத்தம் 6 கோடியே 74 லட்சத்து 70 ஆயிரத்து 654 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இதில் 6 கோடியே 27 லட்சத்து 58 ஆயிரத்து 365 பேர் தங்கள் ஆதார் விபரங்களை இணைத்துவிட்டனர். இதன் காரணமாக ஆதார் எண் இணைக்கப்படாதவர்களின் விபரங்கள் ஸ்மார்ட் அட்டையில் இடம்பெற செய்யாமல் அட்டை தயாரித்து வழங்கப்படுகிறது. ஆதார் எண் இணைக்கப்படாதவர்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கார்டில் உள்ள ‘கியூ ஆர் கோடு’ வடிவம் ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ரேஷன்கார்டு விபரம் சரிபார்க்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது,
ரேஷன் விநியோகம் முற்றிலும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுவிட்டதால் வரும் நாட்களில் கார்டு மாற்றாமலேயே ரேஷன் கடையை மாற்றிக்கொள்ளவும், மொபைல் ஆப் வழியாக இதற்கு வழிவகை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்போர் தாங்கள் விரும்பிய கடைகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இதனை தீவிரமாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் பலதரப்பட்ட மக்கள் பிழைப்புக்கான தொழில் தேடி, சொந்த ஊரை விட்டு, மாநிலத்தை விட்டு, குடும்பம் குடும்பமாக வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் இடம்பெயர்ந்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இவர்களால் இதற்கென விடுமுறை எடுத்து, சொந்த ஊருக்கு சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வரவும் முடியாது, அப்படி சென்றால் பொருளின் விலையை விட போக்குவரத்துக்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும்.
வெளியூர் வேலைகள் நிரந்தரம் இல்லாதது என்பதால் ரிஸ்க் எடுத்து ஊரிலுள்ள ரேஷன் கார்டை தற்காலிக ஊருக்கு மாற்றவும் யாரும் தயாராக இல்லை. பலருக்கு ரேஷன் கார்ட் இருந்தும் பயனில்லாத நிலை தான். இவர்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்கள் அருகில் உள்ள ரேஷன் கடையில் தங்களது ஸ்மார்ட்கார்டை காண்பித்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரில் உள்ள தன்னுடைய வங்கி கணக்கை, நாம் இடம்பெயர்ந்து செல்லும் ஊரில் உள்ள அதே வங்கியில் மாற்றிக் கொள்ளலாம். செல்போன் எண்ணை மாற்றாமலேயே நிறுவனத்தை மாற்றிக்கொள்ளலாம். எந்த மின்வாரிய அலுவலகத்திலும் மின் கட்டணம் செலுத்தலாம், என்பதைப் போன்று இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதும் புதிய மாற்றம் பெறுகிறது.
தற்போது வழங்கப்பட்டுள்ள பாயின்ட் ஆப் சேல் கருவியில் இதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது தமிழகத்தில் மாநிலம் முழுவதும் 288 தாலுகாக்களில் 34 ஆயிரத்து 773 ரேஷன்கடைகள் உள்ளன. கார்டு மாற்றாமலேயே ரேஷன் கடையை மாற்றலாம் என்ற திட்டத்தின் வாயிலாக கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கடைகள் செயல்படும் நிலை ஏற்படலாம். முறைகேடுகளை களைவதற்காக எடுக்கப்படுகின்ற இந்த நடவடிக்கைகளை சாதாரண, அடித்தட்டு மக்களுக்கு பெரும் சவாலாக அமையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.