குடும்பங்களைப் பிரிக்கும் சட்ட விதிமுறை: நிறுத்திய ட்ரம்ப்
By Rahini A
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை எல்லையில் தடுக்கும் நடைமுறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நடைமுறையில் ஒரு முக்கிய மாற்றத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொண்டு வந்துள்ளார். அமெரிக்காவுக்கு மற்ற நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, அதன் அண்டை நாடான மெக்சிக்கோவில் இருந்து தினம் தினம் மக்கள் அமெரிக்காவுக்குள் வந்த வண்ணம் உள்ளனர்.
இவர்களில் பலரும் அமெரிக்காவின் சட்டங்களுக்கு புறம்பாகவே குடியேறி வருகின்றனர். இப்படி வருபவர்களைத் தடுக்க ‘ஸீரோ டாலரன்ஸ் பாலிசி’ என்ற நடைமுறையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப நடைமுறைப்படுத்தினார். இந்த பாலிசியால், அகதிகளாக ஒரு நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் ஆண்கள், அவர்கள் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்படுவர்.
இதனால், பல குழந்தைகள் தங்களது குடும்பங்களைப் பிரிந்து வாடும் நிலை உருவாகியது. இந்நிலையில் தான், குடும்பத்தைப் பிரிக்கும் இந்த நடைமுறைக்கு முடிவு கட்டும் வகையில் விதியில் மாற்றம் செய்து கையெழுத்திட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
அகதிகளாக வரும் குடும்பங்களைத் தங்கவைப்பதற்கு மட்டும் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் இரண்டு மையங்கள் உள்ளன. ஸீரோ டாலரன்ஸ் பாலிசி குறித்து ட்ரம்ப், ‘தற்போது குடும்பங்கள் பிரிக்கப்பட மாட்டாது என்ற புதிய நடைமுறையால், பாலிசியில் பெரிய மாற்றம் எதுவும் செய்யவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் அமல் செய்யப்பட்ட இந்த பாலிசி தொடர்ந்து கட்டுப்பாடுடன் செயல்படுத்தப்படும்’ என்றார்.