முருங்கைக்காயின் இரகசியம்... ஆச்சர்யத் தகவல்!
‘முருங்கைக்காய்' என்றாலே ஒருவித நமட்டுச் சிரிப்பு வருகிறதா? முருங்கையின் முக்கிய பயன் ஒன்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
முருங்கையிலுள்ள புரோட்டீன் என்னும் புரதத்தை பயன்படுத்தி, குறைந்த செலவில் நீரை சுத்திகரிக்கலாம் என்று அமெரிக்காவின் கார்னேஜ் மெல்லன் பல்கலைக்கழக ஆய்வுகள் கூறுகின்றன.
முருங்கை, உணவு மற்றும் எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அதன் விதைகள் தண்ணீரை சுத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பாரம்பரிய வடிகட்டுதல் அல்லது சுத்திகரிப்பு முறைகள் நீரில் கரைந்துள்ள கரிம கரிப்பொருட்களை விட்டுவிடுகின்றன.
ஆய்வு முடிவுகள், மணலுடன் தாவரபொருட்களை சேர்த்து எஃப் - சாண்ட் என்னும் முறையில் சுத்திகரிப்பது நல்ல பயன் நிறைந்த, செலவு குறைவான முறையாகும் என்று தெரிவிக்கின்றன.
முருங்கை விதைகளிலிருந்து புரதத்தை பிரித்து, மணலில் உள்ள சிலிகா பொருட்களுடன் கலக்கும்போது எஃப் - சாண்ட் கிடைக்கிறது. இது தண்ணீரின் கலங்கல் தன்மையை நீக்குவதுடன், நுண்கிருமிகளையும் அழிக்கிறது. கரிம கரிப்பொருட்களும் நீக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை கணக்குப்படி 210 கோடி மக்கள் சுத்தமான தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். வளரும் நாடுகளில் நீரை சுத்திகரிக்க முருங்கை விதை உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.