அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்ட சிறுவர்களுக்கு ரூ.68 கோடி உதவி

சட்ட விரோதமாக குடிபெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகளை அமெரிக்க நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம், எல்லை தாண்டுவது மற்றும் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்கு குடிபெயர்தல் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவ்வளவு கடுமையான விதிகள் இருந்தும் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரை, மாதந்தோறும் 50,000-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக எல்லை தாண்டும்போது பிடிபட்டுள்ளனர்.

வன்முறை தாண்டவமாடும் மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து பெரும்பாலும் மக்கள் அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டுள்ளனர். சட்டவிரோதமாக வருபவர்கள் பிடிக்கப்பட்டு, குழந்தைகள், இளைஞர்கள் மட்டும் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுகின்றனர். கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் 2,300 குழந்தைகள், பெற்றோர் மற்றும் உறவின பாதுகாப்பாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழந்தைகள் சுகாதாரம் மற்றும் மனிதசேவை துறையின் கீழுள்ள அகதிகள் மறுகுடியமர்த்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுவதற்கு மக்களும், அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று டெக்சாஸ், மெக்ஆலனில் குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டனர். கம்பி வேலி அமைக்கப்பட்டு, கூண்டு ஒன்றுக்கு 20 இளைஞர்கள், குழந்தைகள் வீதம் நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

“அமெரிக்கா குடிபெயரும் முகாமோ, அகதிகள் மையமோ அல்ல” என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் குழந்தைகளுக்கு உதவுவதற்காக, சார்லெட் மற்றும் டேவ் வில்னர் தம்பதியர் முகநூல் கணக்கு வழியாக நிதி உதவி திரட்டினர்.

புதன்கிழமை வரை 2,22,000 பேர் 10 மில்லியன் டாலர் (ஏறக்குறைய 68 கோடி) உதவி வழங்கியுள்ளனர். இந்தப் பணம், பெற்றோரை விட்டு அமெரிக்க அரசால் பிரிக்கப்படும் அகதி குழந்தைகளுக்கு உதவும்படி சேவை அமைப்பு ஒன்றுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.

More News >>