அரசு மருத்துவர்கள் ஓய்வு வயது 65 ஆக அதிகரிப்பா...?
அரசு மருத்துவர்களின் ஓய்வு வயதை 58 ல் இருந்து 65 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சில், 2007 ம் ஆண்டு அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் ஓய்வு வயதை, 70 ஆக உயர்த்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. பின், மருத்துவ கவுன்சில் அறிவிக்கையின்படி, பல மாநிலங்களில் அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது, 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் அதேபோல ஓய்வு வயதை அதிகரிக்கக் கோரி 2017 ல் அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க கோரி சென்னை மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர் புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஓய்வு வயதை உயர்த்தினால் 800 அரசு மருத்துவர்கள் பயனடைவர் என தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை சட்டப்படி பரிசீலிக்கும்படி தமிழக சுகாதாரத் துறை செயலர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டனர்.