வனப்பகுதியில் மின்வேலி... நீதிமன்றம் கண்டனம்!
ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் வனம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மின்வேலி அமைக்க அனுமதித்த அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
1980ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வன பாதுகாப்பு சட்டத்தின்படி, வனப்பகுதிகளில் பயிர் சாகுபடி செய்வது சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டது. எனினும், ஈரோடு,கோவை ஆகிய வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் விலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மின்வேலி அமைத்துள்ளதாகக் கூறி, முருகவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வனத்தை பாதுகாக்க வேண்டிய அதிகாரி, சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை என கூறுவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
"சத்தியமங்கலம் வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டத்தை தடுக்க மின்வேலி அமைக்க குத்தகைதாரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. காவல்துறை உதவியுடன் உடனடியாக மின் வேலிகளை அகற்ற வேண்டும்" என வனம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட வன அதிகாரி அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.