பெண் செய்தியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கால்பந்து ரசிகர்!
ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியை குறித்து செய்தி ஒளிபரப்ப சென்றிருக்கும் பெண் செய்தியாளருக்கு கால்பந்து போட்டி ரசிகர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
ஜெர்மானிய செய்தி நிறுவனம் (Deutsche Welle) ஒன்றின் ஸ்பானிய மொழி செய்தியாளர் ஜூலியத் கோன்ஸலெஸ் தேரன். இவர் ரஷ்யாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளைக் குறித்து செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஸரான்ஸ்க் நகரில் நடந்த போட்டியை ஒளிபரப்ப இரண்டு மணி நேரமாக அவர் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஆரம்பமான சமயத்தில், ஜூலியத்தின் அருகே வந்த ரசிகர் ஒருவர் அத்துமீறி, அவர் மார்பு மீது கைகளை வைத்ததோடு, கன்னத்தில் முத்தமும் இட்டார்.
ஒளிபரப்பை தொடர்ந்து நடத்திய ஜூலியத், அறிக்கை முடிந்ததும் அந்த ரசிகரை தேடினார். ஆனால், அந்த நபர் அதற்குள் ஓடிவிட்டிருந்தான்.
இந்த சம்பவத்தை சமூகவலைத்தளமான டிவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியாளர் ஜூலியத், பெண் செய்தியாளர்கள் மதிக்கப்பட வேண்டும். தொழில்முறை செய்தியாளர்களாக நாங்கள் சமமானவர்கள்; உரிமைகள் பெற்றவர்கள்.
கால்பந்து கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை நான் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், எந்தக் கொண்டாட்டமும் எல்லை மீறக்கூடாது. தொந்தரவாய் மாறக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.