கஞ்சா நாடாகிறதா கனடா?

போதை பொருளான கஞ்சாவை வயது வந்தோர் பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி வழங்க இருக்கிறது கனடா அரசு.

இதற்கான மசோதாவை கனடா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றியுள்ளனர். அதன்படி வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதியிலிருந்து கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாகிறது.

போதை பொருளான கஞ்சாவை பயன்படுத்த அநேக நாடுகள் தடை விதித்துள்ளன. உருகுவே நாட்டில் மட்டும் இதை பயன்படுத்த அனுமதி உள்ளது. அமெரிக்காவில் ஒன்பது மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் மருத்துவ ரீதியாக மட்டும் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது.

“தற்போது நம் சிறுவர்களுக்கு கஞ்சா கிடைக்கிறது. ஆனால், அதில் சமூக விரோதிகள், குற்றவாளிகள் லாபம் சம்பாதிக்கின்றனர். அதன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தியுள்ளோம்," என்று கனடா பிரதமர் ஜஸ்டின் டிரூட்டு தெரிவித்துள்ளார்.

பிராந்திய ரீதியாக உரிமம் மற்றும் ஒழுங்குமுறை ஏற்பாடுகளை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், அக்டோபர் மாதம் முதல் இந்த அனுமதி வழங்கப்பட உள்ளது. அதன்படி வயது வந்தோர் 30 கிராம் கஞ்சா வைத்துக் கொள்ள அனுமதி உண்டு.

2027-ம் ஆண்டில் கனடாவில் கஞ்சா வர்த்தகம் ஏறத்தாழ 22,240 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் என்று ஒரு கணக்கு தெரிவிக்கிறது.

More News >>