ஆதார் விவரங்களை கையாள போலீசுக்கு அனுமதி...?

ஆதார் தரவுகளை கையாள காவல்துறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையில் அகில இந்திய கைவிரல் ரேகை பதிவு அமைப்பின் 19-வது மாநாடு நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குநர் இஷ்குமார், நாடு முழுவதும் ஆண்டொன்றுக்கு சராசரியாக பதிவாகும் 50 லட்சம் குற்ற வழக்குகளில் 55 ஆயிரம் வழக்குகளுக்கு மட்டுமே குற்றவாளிகள் கண்டறியப்படுவதாக தெரிவித்தார்.

“இதற்கு முக்கிய காரணம் கைவிரல் ரேகைகளை பாதுகாக்கும் உபகரணங்கள் ஆய்வகங்கள் இல்லாததே. 80-85 % பேர் முதல் முறையாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர்.

அவர்களது கைரேகை பதிவுகளோ வேறு தகவல்களோ போலீசாரிடம் இல்லாததால், தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க இயலவில்லை" என்றார் இஷ்குமார்

"ஆதார் தரவுகளை கையாள காவல்துறைக்கு அனுமதி வழங்கினால், எளிதில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

More News >>