ரோகித் சர்மா அசத்தல் ஆட்டம்-மொகாலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது இரட்டை சதம்
By Isaivaani
இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய அணி 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 68 ரன்களில் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார், பின்னர் வந்த ஷிரேயாஸ் ஐயர் தனது இரண்டாவது போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், ரோஹித் ஷர்மா ஆமை வேகத்திலேயே ரன் எடுத்து வந்தார், 40-வது ஓவரில்தான் தனது 16-வது சதத்தை பதிவு செய்தார்,
அதன் பிறகு ரோஹித் ஷர்மா தன் ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினார், இதனிடையே ஸ்ரேயாஸ் 88 ரன்களில் ஆட்டமிழந்தார், இரண்டாவது விக்கெட்டுக்கு ரோஹித்-ஐயர் ஜோடி 213 ரன்கள் எடுத்தனர்
இலங்கையின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட ரோஹித் ஷர்மா, சதம் அடிக்கும்போது 115 பந்துகள் எடுத்துக்கொண்டார். அதன்பிறகு வெறி கொண்ட வேங்கையாக ஆடிய ரோஹித் ஷர்மா, ஆட்ட நேர முடிவில் 153 பந்துகளுக்கு 208 ரன்களை குவித்தார். அதாவது கடைசி பத்து ஓவரில் மட்டும் 38 பந்துகளை எதிர்கொண்டு 108 ரன்களை குவித்துள்ளார். 13 பவுண்டரிகளும் 12 சிக்ஸர்களும் அடித்து தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் ரோஹித்.
இந்த வருடத்தில் 45 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரே வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரை (40 சிக்ஸ்) பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
இரட்டை சதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா மட்டுமே மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார். குப்தில்(நியூஸிலாந்து), ஷேவாக்(இந்தியா), கெயில்(மேற்கிந்திய தீவுகள்), சச்சின்(இந்தியா) ஆகியோர் தலா ஒரு முறை இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளனர். அதிக சதமடித்த இந்தியர்கள் வரிசையில் ஷேவாக்கை (15) பின்னுக்கு தள்ளி 16 சதங்களுடன் நான்காம் இடத்தில் உள்ளார், முதல் மூன்று இடங்களுக்கு சச்சின்(49), கோலி(32), கங்குலி(22) உள்ளனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி வீரர்கள் கடினமாக இலக்கை நோக்கி விளையாடி வருகிறார்கள்.