மாட்டுத் தொழுவமான இலவச குடியிருப்பு!
ஒசூர் அருகே சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள இலவச குடியிருப்பு வீடுகள் மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது.
அங்குள்ள கோட்டையூர் கொல்லை கிராமத்தில் 2004-ஆம் ஆண்டு 60 இலவச குடியிருப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. அப்போதைய ஒன்றுபட்ட மாவட்டமான தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சித்திக் பெயர் இந்த குடியிருப்புக்கு சூட்டப்பட்டது.
14 ஆண்டுகள் கடந்த நிலையில், வீட்டின் மேற்கூரை, சுவர், தரைதளம், கதவுகள் சேதம் அடைந்துள்ளன. மழை காலத்தில் தொகுப்பு வீடுகளுக்குள் இருக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர். இடிந்து விழும் நிலையில் இருப்பதால் உயிருக்கு அஞ்சிய மலைகிராமவாசிகள், வயல் வெளிகளில் குடிசை போட்டு வசித்து வருகின்றனர்.
சிதிலமடைந்த இலவச வீடுகள் தற்போது ஆடு, மாடுகள் வளர்க்கும் மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது. கால்நடைகளை கூட அந்த வீட்டிற்குள் கட்டி வைக்க அச்சமாக இருப்பதாக தெரிவித்த கோட்டையூர்கொல்லை கிராமமக்கள், சேதம் அடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.