காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! ஐஎஸ் மீது சந்தேகம்
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் அனாந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிசூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் பொது மக்களைச் சேர்ந்த ஒருவரும் பாதுகாப்புப் படை தரப்பில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டத் தீவிரவாதிகள், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அனந்த்நாக் பகுதியில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் சிலர் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வந்துள்ளது.
இதையடுத்து அவர்களை தேடும் பணியை முடுக்கிவிட்டனர் பாதுகாப்புப் படையினர். இதில், அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 4 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அவர்களை காவலர்கள் சுற்றி வளைத்த நிலையில், தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால், பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் தொடுத்தனர். இதில் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் பாதுகாப்புப் படை தரப்பில் ஒருவரும், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிசூடு நடந்து வருகிறது.