துப்பாக்கி சூடு.. போலீஸார் விசாரிப்பது தவறானது...- திருமாவளவன்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து தமிழக போலீசார் விசாரிப்பது தவறானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், "துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஐந்து வழக்குகள், சிபிசி ஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீதான 200க்கும் மேற்பட்ட வழக்குகளை உள்ளூர் போலீசாரே விசாரிப்பது தவறானது."
"துப்பாக்கி சூடு வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் தான், மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக உள்ளனர். மாநில போலீசார் மீது குற்றம் சாட்டப்படுவதால் இந்த வழக்குகளை அவர்கள் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. அதனால் வழக்கை சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்" என திருமாவளவன் கோரினார்.
இந்த மனு நீதிபதி சுப்பையா, நீதிபதி சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. பின்னர், அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, மனு குறித்து முறையிட்டார். இதையடுத்து மனு மீதான விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.