அந்த மூன்று நிமிடங்கள்... ஜப்பான் அரசு ஊழியருக்கு நேர்ந்த கதி!
“உங்களுக்கென்ன கவர்ன்மெண்ட் உத்தியோகம்! யார் கேள்வி கேட்க முடியும்?" என்பது பொதுப்படையான பேச்சு.
ஜப்பானில் அரசு ஊழியர் ஒருவர் மீது எடுக்கப்பட்ட கண்டிப்பான நடவடிக்கை, அவர் மீது பலருக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானிய நகரமான கோபேயின், மேற்குப் பகுதியில் நீர்ப்பணித்துறையில் பணியாற்றும் 64 வயது ஊழியருக்கு அரை நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
மதிய உணவு வாங்குவதற்காக அவர் குறித்த நேரத்துக்கு மூன்று நிமிடங்கள் முன்னதாக சென்றதை கண்காணித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் அவர் 26 முறை, மதிய உணவு இடைவேளையான பிற்பகல் 1 மணிக்கு மூன்று நிமிடங்கள் முன்னதாக இருக்கையை விட்டு சென்றுள்ளாராம்.
இத்துடன், நீர்ப்பணித்துறை, செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, பொது மக்கள் பணிக்கான விதியினை அந்த ஊழியர் மீறியுள்ளார். தவறான செயல் நடைபெற்று விட்டதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் அந்தப் பணியாளருக்கு ஆதரவாக பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.