ரொமன்ட்டிக் சிஇஓ - சீட்டைக் கிழித்தது இன்டெல்!
அலுவலக பணியாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய விஷயம் தெரிய வந்ததால், தலைமை செயல் அதிகாரி பிரையன் கிர்ஸானிச்சை பதவி விலகுமாறு இன்டெல் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. அவரது பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போது 58 வயதாகும் பிரையன், 1982-ம் ஆண்டு முதல் இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2013 மே முதல் அவர் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வந்துள்ளார். அதற்கு முன்னர், செயல் துணை தலைவர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி (சிஓஓ) ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
அலுவலகத்தில் உள்ளவருடன் ஒப்புதலுடன் நெருங்கிப் பழகினாலும், அது நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதாலும், நிறுவனம் வகுத்துள்ள நன்னடக்கை விதிகளை மீறும் செயல் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரையில், தலைமை நிதி அதிகாரி ராபர்ட் ஸ்வான், இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.