கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!
கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
பிப்ரவரி 21-ம் தேதி மதுரை பொதுக் கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவித்தார். அதன் பின், டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திடம் தனது கட்சியை அங்கீகரிக்கும்படி, விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த விண்ணப்பத்துக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என கால அவகாசம் தரப்பட்டது. எந்த ஆட்சேபனமும் இல்லாததால் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அண்மையில் டெல்லி சென்றிருந்த கமல் ஹாசன், தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மக்கள் கட்சி, பதிவு பெற்ற அரசியல் கட்சி என்பதை உறுதி செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்டு 10 சதவிகித வாக்குகளை பெறும்போது, மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.