வென்றது பிரேசில்! மீண்டு நிரூபித்த நெய்மர்
ஃபிபா கால்பந்து உலக கோப்பையின் நேற்றைய லீக் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற பிரேசில், கோஸ்டா ரிக்கா அணியை சந்தித்தது.
இந்தப் போட்டியில் பிரேசில் 2 - 0 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்காவை வீழ்த்தியுள்ளது. இந்த ஆண்டு உலக கோப்பையில், தனது முதல் போட்டியை ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது பிரேசில்.
அந்தப் போட்டியில் கண்டிப்பாக பிரேசில் வென்றுவிடும் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில், ஆட்டம் 1 - 1 என்ற கோல் ரீதியில் டிரா ஆனது. இதனால், தனது உலக கோப்பை வெல்லும் கனவை நிலைநாட்ட அடுத்த வரும் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இருந்தது பிரேசில்.
இது ஒரு புறமிருக்க, பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, பிரேசில் அணியின் கேப்டன் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த உலக கோப்பையில் அவர் மேற்கொண்டு விளையாடுவது கடினம் தான் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால், நேற்று பிரேசிலுக்கும் கோஸ்டா ரிக்காவுக்கும் இடையில் நடந்த போட்டியில் களம் கண்டார் நெய்மர். போட்டியின் 90 வது நிமிடத்தில் பிரேசிலின் ஃபிலிப் குச்சீனியோ, ஒரு அட்டகாசமான கோலை போட்டார். இதையடுத்து, 6 நிமிடங்கள் போட்டி நீட்டிக்கப்பட்டது. 6 வது நிமிடத்தின் கடைசி சில நொடிகளில் நெய்மர் ஒரு கோல் போட்டார். அத்துடன் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிக்காவை வென்றது.