எட்டு வழிச்சாலை நன்மையைத் தரும்: மத்திய அதிகாரி விளக்கம்!
சேலம் - சென்னை இடையில் வரப் போகும் 8 வழிச்சாலை சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்று சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரி அருண் பிரேம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
சேலம் - சென்னைக்கு இடையில் 270 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை திட்டம் அமல்படுத்தப்படப் போகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
இந்தத் திட்டத்தால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், காடுகளும் அழிக்கப்படும் என்று கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் விவசாயிகளும் தொடர்ந்து, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த 8 வழிச் சாலைக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் அதிகாரி அருண் பிரேம்நாத், இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில், ‘இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் 10,000 லாரிகள் மற்றும் 10,000 இதர வாகனங்கள் சாலையை பயன்படுத்த ஆரம்பிக்கும். இதனால், 60 கிலோ மீட்டர் பயண தூரம் குறைக்கப்பட்டு, 6 கோடி லிட்டர் டீசல் செலவு நீங்கும். இதன் மூலம், 17 கோடி கார்பன்-டை-ஆக்சைட் வெளியேற்றம் தடுக்கப் படுகிறது. இந்த கார்பன்-டை-ஆக்சைட் குறைப்பு 38,000 ஹெக்டர் காடு வளர்ப்புக்கும் 75 லட்ச மரங்களுக்கும் சமம்’ என்று தரவுகளைக் கூறியுள்ளார்