கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு! இளம்பெண் கொலை!

நொய்டாவில் இருக்கும் ஒரு வணிக வளாகத்தில் 18 வயது பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் மர்ம நபர். பின்னர், தற்கொலை செய்து கொள்ள முயன்ற அந்த நபரை போலீஸ் பிடித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அந்த நபரின் பெயர் குல்தீப் சிங் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நொய்டாவில் இருக்கும் வணிக வளாகத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வேலை செய்து வந்துள்ளார். அந்த வளாகத்துக்கு காலை 11:30 மணிக்கு வந்த குல்தீப் சிங், பெண்ணை பின் தொடர்ந்து அவரை பல முறை கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர், அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார் குல்தீப் சிங். ஆனால், வழியில் போலீஸ் இருப்பதைக் காணும் அவர், தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது, போலீஸ் குல்தீப் சிங்கைப் பிடித்து மருத்துவமனையில் அனுமதித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குல்தீப் சிங், சிகிச்சை பெற்று வருகிறார்.

கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், குல்தீப் சிங் கடந்த சில மாதங்களாகவே தங்களது பெண்ணை பின் தொடர்ந்து வருவதாகவும், அதனால் பெண்ணுக்குத் தனியே ஆட்டோ ஏற்பாடு செய்து வேலைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளனர்.

கொல்லப்பட்ட பெண் பெற்றோருடன் தாத்ரி பகுதியில் வசித்து வந்தவர். ‘குல்தீப் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். அவர் தாத்ரி பகுதியின் கௌதம்புரியில் வசித்து வந்துள்ளார்’ என்று போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

More News >>