சர்வதேச கபடி: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!
உலகின் முன்னணி 6 நாடுகள் பங்கேற்கு கபடி மாஸ்டர்ஸ் 2018 போட்டிகள் துபாயில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் உலக சாம்பியனான இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானைச் சந்தித்தது. இந்தப் போட்டி தொடங்கியது முதலே இந்திய அணியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.
இந்தியத் தரப்பில் கேப்டன் அஜய் தாக்கூரும், ரோகித் குமாரும் அதிகமான புள்ளிகளை எடுத்துக் கொண்டிருந்தனர். தாக்கூர் மட்டும், மொத்தமாக 8 புள்ளிகள் எடுத்து கலக்கினார். ஆட்டத்தின் பாதி நேர முடிவில், 22 - 9 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி, பாகிஸ்தானை முந்தி இருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்திலேயும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. இந்திய அணி, ரெய்டிங்களில் மொத்தமாக 15 புள்ளிகள் எடுத்தது. பாகிஸ்தான் வெறும் 9 தான் எடுத்தது. அதே நேரத்தில், 12 டேக்கல் புள்ளிகள் எடுத்தது இந்தியா.
பாகிஸ்தான் 8 புள்ளிகள் மட்டுமே எடுத்தது. இப்படி, அனைத்துத் தளங்களிலும் இந்திய அணி, பாகிஸ்தானைவிட முன் இருந்ததால், ஆட்ட நேர முடிவில் இந்தியா - 36 புள்ளிகள் எடுத்தது. பாகிஸ்தான் எவ்வளவு முயன்றும் 20 புள்ளிகளைத் தாண்ட முடியவில்லை. அடுத்ததாக இந்திய கபடி அணி, கென்யாவைச் சந்திக்க இருக்கிறது.