ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2018: முதல் பரிசை வென்ற சென்னை மாணவர்கள்
மத்திய அரசு நடத்திய ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2018ம் போட்டியில் சென்னையை சேர்ந்த கே.சி.ஜே. பொரியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசை வென்றனர்.
மத்திய அரசின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒன்று, டிஜிட்டல் இந்தியா திட்டம். இத்திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2018’ என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பதிறன் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டியின் முதல்கட்ட சுற்று முடிந்து, சமீபத்தில் இரண்டாம் கட்ட சுற்று போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்றது. இதற்கான 10 மையங்கள் அமைக்கப்பட்டன.
இதில், ராஜஸ்தான் மாநிலம் பிலானியில உள்ள அறிவியல், தொழில் ஆராய்ச்சி கவுன்சில் - மத்திய மின்னியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆர்-சிஇஇஆர்ஐ) நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த கே.சி.ஜே.பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
இவர்கள், கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு வாழ்க்கையை எளிதாக்க உதவும் சாதனத்தை உருவாக்கி முதல் பரிசை தட்டிச் சென்றனர். இவர்களை தொடர்ந்து, பெங்களூரு மாணவர்களுக்கு 2ம் பரிசு கிடைத்தது.