கனடா எல்லையில் ஜாகிங் சென்ற பெண்ணுக்கு அமெரிக்காவில் சிறை

கனடா  தேசத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா, ஒயிட் ராக் பகுதியில் கடற்கரையில் ஜாகிங் சென்ற இளம்பெண், எல்லை தாண்டியதாக அமெரிக்க எல்லை பாதுகாவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட அவருக்கு, ஜூன் மாதம் 6-ம் தேதி விடுதலை கிடைத்துள்ளது. ஃபிரெஞ்ச் தேசத்தை சேர்ந்தவர் செடல்லா ரோமன் (வயது 19). இவரது தாயார் கிறிஸ்டேன் ஃபெர்ன், கனடா தேசத்தில் நார்த் டெல்டா, பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வசித்து வருகிறார். இளம் பெண்ணான செடல்லா ரோமன், தன் தாயாரைப் பார்ப்பதற்காக கனடா தேசத்துக்கு வந்திருந்தார். அங்கு அவர் ஆங்கில மொழிப் பயிற்சியும் எடுத்து வந்தார். கடந்த மே மாதம் 21-ம் தேதி செடல்லா, ஒயிட் ராக் பகுதியிலுள்ள கடற்கரையில் ஜாகிங் சென்றார். சிறிது தூரம் சென்ற அவர், கடற்கரையில் புகைப்படம் எடுத்து விட்டு, திரும்பிச் செல்ல எத்தனித்துள்ளார்.    அப்போது அங்கு வந்த அமெரிக்க எல்லை பாதுகாவல் அதிகாரிகள் இருவர், அது அமெரிக்காவின் வாஷிங்டன், பிளேய்ன் பகுதி எனவும், செடல்லா அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாக தாண்டி வந்துள்ளதாகவும் கூறி அவரை கைது செய்தனர். ஜாகிங் சென்ற நேரத்தில், அவரிடம் அரசு கொடுத்த எந்த அடையாள அட்டையோ, பயண அனுமதி சான்றோ இல்லை.   பிளேய்ன் பகுதியில் கைது செய்யப்பட்ட அவர், டாகோமா வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார். தனது தாயாருடன் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை கொண்டு வரும்படி செடல்லா ரோமன் கூறியுள்ளார். அந்த ஆவணங்களின் அடிப்படையில் ஜூன் மாதம் 6-ம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார்.   தான் கைது செய்யப்பட்ட பகுதியில் நாட்டின் எல்லையை குறிக்கும் எந்த அடையாளமும் இல்லாததால் பலருக்கு இது போன்ற சங்கடங்கள் நேரக்கூடும் என்று செடல்லா ரோமன், செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
More News >>