பசுமை வழிச் சாலை.. மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்- மத்திய அரசு
சேலம்-சென்னை இடையிலான பசுமை வழிச் சாலை திட்டம் தொடர்பாக மத்திய அரசின் வனம்-சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டு நிபுணர் குழு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதில், “சென்னை-சேலம் இடையில் 277 கி.மீ. தூர பசுமை வழி சாலைக்கு வனம்-சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தொடர்பான முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வனம்-சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன், பொதுமக்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். பொதுமக்கள் எந்த வகையில் பிரச்சினைகள் எழுப்புகிறார்கள் என்பதையும் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும்.
மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாக திட்டம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் அறிக்கை தாக்கல் செய்து அதனை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
277 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை-சேலம் இடையே 8 வழி வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.