பத்திரிக்கையாளர் நலவாரியம்: கமல்ஹாசன் கோரிக்கை

பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் மற்றும் நலனை கருதி அவர்களுக்கான நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தள்ளார்.

பத்து நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், குறிப்பாக செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள், அச்சு, சுற்றுலா, கலை, பண்பாடு துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பத்திரிகையாளர் நலவாரியம் அமைத்திட வேண்டும். பல்வேறு சூழ்நிலைகளில் தொடர்ந்து தாக்கப்படுவதால், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வீட்டு வசதி வாரியத்தில் அவர்களுக்கு முறையாக வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓய்வூதியம் பெறுவதிலுள்ள சிக்கல்களை களைய வேண்டும். 15 ருடங்களுக்கு மேல் முழுநேர பணியாளர்களாக ஏதேனும் ஊடகத்தில் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு அரசின் அடையாள அட்டை வழங்க வேண்டும்.தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்களும் காணும் வகையில் நேரலை செய்ய வேண்டும்.

வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கிய சாதனை விளக்க விளம்பர காணொளிக்கு ஆன தயாரிப்பு செலவின் விளக்கத்தை அரசு வழங்கி, அது தற்போது நிறுத்தப்பட்டதற்கான பின்னணி குறித்து விளக்க வேண்டும். தமிழகத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவாயை உயர்த்தவும், அதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகவும் சுற்றுலாத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>