குஜராத் சட்டமன்ற தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக தொடங்கியது
குஜராத்: குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான 93 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
குஜராத்தில் கடந்த 9ம் தேதி மற்றும் இன்று (14ம் தேதி) என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில், மொத்தமுள்ள 182 தொகுதிகளில் தெற்கு குஜராத், சவுராஷ்டிரா உள்பட 89 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 8 மணியவில் வாக்குப்பதிவு தொடங்கியது.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாக ஆட்சியை பிடிக்க துடிக்கும் பாஜகவும், காங்கிரஸ் தலைவர் பொறுப்பு ஏற்க இருக்கும் ராகுல் காந்திக்கு இது மிகப்பெரிய சவாலாகவும் அமைந்துள்ளது. ஆட்சியை பிடிக்க காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் கடும்போட்டி வாக்காளர்களுக்கு இடையே விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து, கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்துள்ள பாஜக, இந்த தேர்தலில் முதல்வர் விஜய் ரூபானியை களமிறக்கி உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பல இடங்களில் பிரசாரம் செய்தார். இதேபோல், காங்கிரஸ் சார்பில் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தனது கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
மேலும், பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் முடிந்த நிலையில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2ம் கட்ட தேர்தலில், இந்த 93 தொகுதிகளில் போட்டியிடும் 851 வேட்பாளர்களில் 69 பேர் பெண்கள். இதற்காக 25,558 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தலில் யாருக்கு வாக்களத்தோம் என்பதை அறிந்துக் கொள்ளும் ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது. தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.