வடமாநிலங்களில் வெளுத்துவாங்கும் கனமழை: பொதுமக்கள் வீடுகளில் தஞ்சம்
மகாராஷ்டிரா, குஜராத உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கன மழை பெய்து வருகிறது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால், பொது மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதுபோல், சையான் ரயில் நிலையத்தில் மழைநீரில் தண்டவாளம் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தானே, பைக்குல்லா ரயில் நிலையங்களுக்கு இடையே 15-20 நிமிடங்கள் ரயில் தாமதமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலியால், மும்பை விமான நிலையத்தின் பிரதான ஓடுதளம் சுமார் 30 நிமிடங்கள் வரை மூடப்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.