எய்ம்ஸ் அடிக்கல் நடும் விழாவுக்கு மோடி வருகிறார்- தமிழிசை தகவல்
”மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நசும் விழாவுக்காக பிரதமர் மோடி மதுரைக்கு வருகிறார்” என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், ‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தது. இதையடுத்து, தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது என்பது குறித்து கடந்த சில மாதங்களாக ஆய்வு நடத்தியது மத்திய அரசு அமைத்த ஆய்வுக் குழு.
குறிப்பாக, மதுரை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்தக் குழு ஆய்வு நடத்தியது. இதைத் தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் உள்ள தோப்பூரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
இங்கு, அதிநவீன வசதியுடன் 750 படுக்கை அறைகள் அமைக்கப்படும். மேலும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்காக 100 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறுகையில், “எய்ம்ஸ் மருத்துவமனை, காவிரி ஆணையம் அமைப்பு என பல நலத்திட்டங்களை தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்து வருகிறது. சட்டத்தில் என்ன இருக்கிறதோ, அதனையே அறிக்கையாக ஆளுநர் வெளியிட்டுள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வர இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.