ஒக்கி புயலால் உயிரிழந்த பிற குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
சென்னை: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினரின் நலன் கருதி ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலால் கடும் சேதம் ஏற்பட்டது. இதில், கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலர் புயலில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், பலர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்தார். தற்போது, ஒக்கி புயலால் உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பல அறிவிப்புகளையும் வெளியிட்டேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் கள ஆய்வு மேற்கொண்டபோது, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என என்னிடம் பலர் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையினை ஏற்று, ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.4 லட்சம் நிவாரண நிதியுதவியுடன், கூடுதலாக ரூ.6 லட்சம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும், ஆக மொத்தம் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.