தமிழக அரசு பிரம்மாண்ட திரை விழாவை நடத்தும்- அமைச்சர் தகவல்
”தமிழக அரசின் சார்பில் விரைவில் பிரம்மாண்ட திரைப்பட விழா கொண்டாடப்படும்” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இன்றைய சட்ட்சபைக் கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பான விவாதத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், “தமிழகத்தில் சினிமா துறையை அதிமுக அரசு தான் மீட்டு எடுத்துத் தந்துள்ளது. வரியைக் குறைக்கக் கோரிக்கை வைத்த போதெல்லாம் ஏற்றுக்கொண்டு சினிமாத் துறைக்கு உதவியது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை மணிமண்டபத்துக்கு வெளியேயும் வைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், சாலைகளில் சிலை அமைப்பது சட்டப்படிக் குற்றம் ஆகும். அதனால் அதைச் செய்ய முடியாது.
மேலும், சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தின் கலை நயம் குறையாமல் 85 லட்சம் ரூபாய்க்கு வள்ளுவர் கோட்டத்தின் புனரமைப்புப் பணிகள் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.