தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள்- சென்னைக்கு மாற்றம்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடத்திய மாபெரும் போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து இதுநாள் வரையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்ததாகப் பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடர்ப்பட்டுள்ளன.
இன்று அவ்வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கே மாற்றுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.