சென்னையில் புல்லட் திருடர்கள் கைது !
பைக் ரேஸ் மூலம் நள்ளிரவில் புல்லட்களை திருடும் கும்பலை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை ராமபுரம், கேகே நகர், எம்ஜிஆர் நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நள்ளிரவு நேரத்தில் திருடப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நகர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், எம்ஜிஆர் நகர் பகுதியில் புல்லட் கொள்ளையர்கள் புல்லட்டை திருடும் சிசிடிவி காட்சிகள் எம்ஜிஆர் நகர் காவலர்களுக்குக் கிடைத்தது. இதனடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், விஜய் என்பவர் இந்த திருட்டு கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், அசோகன் என்பவரும் இந்த திருட்டுச் செயலுக்கு கூட்டாளியாக இருந்துள்ளார். அத்துடன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மோகன் என்பவரும் இந்த திருட்டுக்கு துணை செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
விஜய் தலைமறைவாக உள்ளார் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் விஜய்யின் கூட்டாளிகளான அசோக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.