டிரம்ப்பின் செயலரை துரத்திய உணவகம்.!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் செய்திதுறை செயலராக இருப்பவர் சாரா சாண்டர்ஸ். வெர்ஜினியாவில் லெக்ஸிங்டனிலுள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்த சாராவுக்கு உணவு பரிமாற உரிமையாளர் மறுத்து விட்டார். இதை மறுநாள் தனது அலுவல்ரீதியான டிவிட்டர் பக்கத்தில் செய்திதுறை செயலர் பதிவு செய்துள்ளார்.
லெக்ஸிங்டனில் உள்ள உணவகம் ரெட் ஹென். அதிபர் டிரம்ப்பின் செய்திதுறை செயலர் சாரா சாண்டர்ஸ், தனது கணவர் மற்றும் சிலருடன் உண்பதற்காக சென்றுள்ளார். அவருக்கு உணவு வழங்க ஆயத்தமான உணவக பணியாளர்கள், அதிபரின் செயலர் வந்திருப்பதை தங்கள் உரிமையாளருக்கு தெரிவித்தனர்.
தகவல் அறிந்த உரிமையாளர் ஸ்டெபானி வில்கின்சன் உடனடியாக உணவகத்திற்கு வந்துள்ளார். பணியாளர்கள், டிரம்ப்பின் நிர்வாகத்தின்மேல் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். பணியாளர்களின் சம்மதத்தின்பேரில், ஸ்டெபானி வில்கின்சன், தன்னை சாரா சாண்டர்ஸிடம் அறிமுகம் செய்து கொண்டு, அவரை தனியே அழைத்து பேசியுள்ளார்.
அப்போது, தங்கள் உணவகம் நேர்மை, கருணை மற்றும் ஒத்துழைப்பு ஆகிய பண்புகளை கொள்கையாக வைத்திருப்பதாக கூறி, சாண்டாவை வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மற்றவர்களுக்கு பரிமாறுவதில் எந்த ஆட்சேபணையும் இல்லையென்றும் உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார். சாரா சாண்டர்ஸூம் அவருடன் வந்திருந்தவர்களும் உடனடியாக வெளியேறியுள்ளனர்.
எல்லையில் சிறுவர்களை பெற்றோரிடமிருந்து பிரித்ததுபோன்ற பல நடவடிக்கைகள் மூலம் அநேகர் டிரம்ப்பின் நிர்வாகத்தின்மீது அதிருப்தியில் உள்ளனர். அதனை இதுபோன்று அரசு அதிகாரிகளை புறக்கணிப்பதன் மூலம் காட்டி வருகின்றனர்.
தனது செயலருக்கு நேர்ந்த இந்த புறக்கணிப்புக்கு அதிபர் டிரம்ப், கண்டனம் தெரிவித்துள்ளார்.