எங்கே போகிறது... கல்லூரி பருவ காதல்..!
கடந்த வாரம் காலை ஏழு மணிக்கு திருப்பூரிலிந்து கோவை செல்லும் பேருந்தில் ஏறினேன், நிற்க இடமில்லை, அவ்வளவு கூட்டம், அத்தனை பேரும் கல்லூரி மாணவ, மாணவியர்.
நான் (பேருந்தின்) நடுவில் மாட்டிக்கொண்டேன். நடத்துனரிடம் 20 ரூபாய் கொடுத்து, டோல்கேட் என டிக்கெட் கேட்டேன், அவர் என்னை மேலும் கீழும் எகத்தாளமாய் பார்த்து, "வேற பஸ்ஸு கெடைக்கலயா" என்றார். மீதி ஆறு ரூபாய் சில்லறை தராமல்....
அது கல்லூரி பேருந்தும் அல்ல... மகளிர் பேருந்தும் அல்ல... அவர் அப்படி கேட்டதன் மர்மம் எனக்கு அப்போது விளங்கவில்லை.
அந்த பேருந்தில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயணித்தார்கள். அவர்களை மாணவ, மாணவிகள் என்பதை தவிர்த்து இளைஞர், இளைஞிகள் என்பதா.? அல்லது ஆண், பெண் நண்பர்கள் என்பதா? அல்லது காதலன், காதலி என்பதா? எவ்வாறு அவர்களை குறிப்பிடுவது என்ற மகா குழப்பத்தில் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
நான் நடுவில் நிற்கிறேன் என்பதால், பெண்கள் அமரும் இருக்கை எனக்கு மிக முன்னால் இருந்தது, அதில் ஒரு இருக்கையில் இரு இளைஞிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு மிக நெருக்கமாக நான்கு இளைஞர்கள் நின்றிருந்தார்கள். அதில் இரண்டு இளைஞர்கள் அந்த இரண்டு இளைஞிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
உரையாடல் "உனக்கு என்ன பிடிக்கும்" ரேஞ்சில் தான் போய் கொண்டு இருந்தது, சரியாக என்னால் கவனிக்க முடியவில்லை, காரணம் பேருந்தில் உள்ள ஆடியோ பிளேயரின் இசை கலந்த இரைச்சல்.
அருகில் நின்ற மற்ற இரண்டு இளைஞர்கள் தனது கைப்பேசியிலுள்ள இன்ஸ்டாகிராமில் மிகவும் இன்ட்ரஸ்டாக இருந்தார்கள், அந்த இளைஞிகளை ஒரு பொருட்டாக அவர்கள் நினைக்கவில்லை. அரைமணி நேர காத்திருப்புக்கு பிறகு சாலை மேல் ஏறி உருளத் தொடங்கியது அந்த பேருந்து.
திடீரென அந்த இரண்டு இளைஞிகளும் இருக்கையை விட்டு எழுந்து நின்றார்கள், பேருந்து மாறி ஏறிவிட்டார்கள் என்று நினைத்தேன், இருக்கையை விட்டு நடைபகுதிக்கு வந்து நின்றார்கள், ஆனால் பேருந்தை நிறுத்த சொல்லி யாரும் கூச்சலிடவில்லை.
அதற்குள் அந்த இரண்டு இன்ஸ்டாகிராம் இளைஞர்கள் இரண்டு பேரும் அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். சற்றே எதிர்பாராத நேரத்தில், அந்த இரண்டு இளைஞிகளும் அந்த இளைஞர்களின் மடியில் அமர்ந்து கொண்டார்கள். எனக்கு ஒரு வினாடி இதயம் நின்று துடித்தது. ஆனாலும் அந்த இளைஞர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பணியில் மீண்டும் மூழ்கிக் கொண்டார்கள். இவ்வளவு நேரம் உரையாடிக் கொண்டிருந்த மற்ற இரண்டு இளைஞர்களும் தன் உரையாடலை நிறுத்தவில்லை.
இன்னொருவன் மடியில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணுடன், ஒரு ஆண் அவள் அருகில் நின்றுகொண்டு காதல் மழை பொழிகிறான். இந்த காட்சியை என் மனம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. வேறு யாராவது இந்த காட்சியை கவனிக்கிறார்களா என நோட்டம் விட்டேன், கேஷுவலாகத்தான் பார்க்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இதே காட்சி இன்னொரு இருக்கையிலும் அரங்கேறிக் கொண்டிருந்தது. நடத்துனரின் பேச்சின் மர்மம் விளங்கத் தொடங்கியது. என் மனதில் ஆயிரம் கேள்விகள், பதில் யாரிடம் கேட்பது? இதுபோல் பெண்களிடம் கேட்டே ஆக வேண்டும்.
இதற்குத் தான் உன் தாயும் தந்தையும் உன்னை படிக்க கல்லூரிக்கு அனுப்புகிறார்களா? உன்னை நம்பித்தானே உன்னை இந்த பேருந்தில் போக உன் பெற்றோர் அனுமதித்திருப்பார்கள்? உன் சிற்றின்பத்திற்காக நீ செய்வது கீழ்த்தரமாக தெரியவில்லையா?
ஒருவனோடு உட்கார்ந்து வேறொருவனோடு பேசுகிறாயே, இதை நீ உன் பாஷையில் நட்பென்று சொல்லலாம், சமூகம் நடத்தை சரியில்லை என்கும். உன் சுற்றத்தார் வளர்ப்பு சரியில்லை என்பர். என்போன்றோர் இதை கலாச்சார சீரழிவென்போம்.
உன் பெற்றோர் உயிர் விடுவர், அல்லது உயிரெடுப்பர், இவ்விரண்டில் எதைச் செய்தாலும் அவர்களுக்கு அதுதான் நீதி...! இப்படிப்பட்ட ஆண்களும் கலாச்சார சீரழிவிற்கு காரணமாகி விடுகிறார்கள். சம காலத்து சினிமா கதைகள் பல, காதலை எவ்வளவு வளர்க்க வேண்டுமோ அவ்வளவு வளர்த்துவிட்டுள்ளது.
இளைஞர்கள் அனைவரும் தங்களை ஹீரோவாகவும், இளைஞிகள் அனைவரும் தங்களை ஹீரோயினாகவும், தங்கள் நட்பு உயர்ந்தது என்றும், தங்கள் காதல் தெய்வீகம் என்றும் கற்பனை செய்துகொண்டு, அதையே வாழ்க்கையாக வாழத் தொடங்கிவிட்டார்கள். நமது வெளிப்பாடு சமுதாயத்தில் எத்தகைய பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை.
வருங்கால சமுதாயத்தின் தவறுகளை இதுபோன்ற பேருந்துகள் ஆதரிக்கின்றன. வெளியே தெரியாமல் மறைக்கப் பார்க்கின்றன. மறைப்பது தானே அனைவராலும் கவனிக்கப்படும். ஆகவே நாட்டின் கண்களே... உங்களை பெற்றவர்களுக்கு மறைத்து நீங்கள் செய்யும் தவறுகள், நாளைய பெரும் குற்றங்களுக்கு ஆரம்ப புள்ளியாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நன்றி