அவசர நிலை பிரகடனப்படுத்திய ஆண்டு ஓர் இருண்ட காலம்- பிரதமர் மோடி

2018, ஜூன் 25 ஆம் தேதியோடு சுதந்திர இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தி 43 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில், இது குறித்து ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மோடி, ‘இந்தியா, அவசர நிலை பிரகடனத்தை ஒரு இருண்ட காலமாக நினைவு கூறுகிறது. அச்சமயத்தில், அனைத்து அதிகார அமைப்புகளும் நசுக்கப்பட்டு பரவலான பயம் உருவாக்கப்பட்டது.

அரசியல் அதிகாரத்தால், மக்கள் மட்டும் ஒடுக்கப்படவில்லை. கலை மற்றும் கருத்து சுதந்திரமும் ஒடுக்கப்பட்டன. 43 ஆண்டுகளுக்கு முன்னர் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலைக்கு எதிராக நின்று போராடிய மக்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் போராட்டம் தான் மனித உரிமைகளுக்காக பொதுமக்கள் போராட வேண்டும் என்ற தைரியத்தைக் கொடுத்தது.

நம் ஜனநாயக மாண்பை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். கேள்வி கேட்பதும், விவாதிப்பதும், கருத்து சொல்வதும் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். நம் அரசியல் சட்ட சாசனத்தில் இருக்கும் இந்த அடிப்படைகளை எந்த சக்தியும் குலைத்துவிட முடியாது’ என்று கருத்து கூறியுள்ளார்.

பிரதமர் இந்தியா காந்தி ஆட்சியில் இருந்த போது, 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை, 21 மாதங்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ‘உள்நாட்டு கிளர்ச்சி’ என்று காரணம் கூறி அவசர நிலை பிரடனப்படுத்தப்பட்டது. அப்போது, மக்களின் பல அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியாகின. சுதந்திர இந்தியா வரலாற்றில் ‘அவசர நிலை பிரகடனம்’ தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

More News >>